Sunday 15 January 2017

ஏழூர் பண்டாரவிளை

முகவுரை:-

                       பண்டாரவிளை எனும் "ஏழூர் பண்டாரவிளை" கிராமம் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே பெருங்குளம், பண்ணைவிளை, நட்டாத்தி, சாயர்புரம் போன்ற கிராமங்களும் அமைந்துள்ளன. இக்கிராமம் பெருங்குளம் பேரூராட்சிக்கு உட்ப்பட்டது. இங்கு அழகிய இரண்டு CSI ஆலயங்களும் ஒரு அப்போஸ்தல சபையும், பல கோவில்களும் உண்டு. மேலும் மூன்று பள்ளிக்கூடங்களும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், அருமையான குளமும் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் பலர் அவர்களுடைய முற்பிதாக்களின் காலங்களில் வெளியூர்களில் இருந்து குடியேறியதால் குறிப்பாக உவரி, காயாமொழி போன்ற ஊர்களில் இருந்து குடியேறியதால், "பண்டாரவிளை" என்ற இப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.மேலும் இக்கிராமம் ஆரம்பத்தில் ஏழு பெரிய தெருக்களை கொண்டிருந்ததாகவும் அதனாலே "ஏழூர் பண்டாரவிளை" எனவும் அழைக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது. இங்கு மக்கள் பனை தொழில், விவசாயம், வியாபாரம் போன்ற தொழிலில் ஈடுபடுகின்றனர்.குறிப்பாக இவ்வூர் எலும்பு முறிவு வைத்தியர்களுக்கு பெயர்பெற்றது.இக்கிராமத்திலிருந்து மட்டுமே இருபதுக்கும் அதிகமான வைத்தியர்கள் சுற்றுவட்ட கிராமங்களிலும் சென்னை போன்ற வெளிமாவட்டங்களிலும் தொழில் செய்கின்றனர். இந்த இயற்கை எலும்பு முறிவு வைத்தியமானது ஆரம்ப காலங்களில் நாகர்கோவில், கேரளா போன்ற இடங்களில் இருந்து கற்றுக்கொள்ளப்பட்டு, பின் பல தலைமுறைகளாக செய்துவருகிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் பண்டாரவிளை என்ற உடன், "கட்டு போடும் ஊரா.?" என்று சொல்லும் அளவுக்கு இம்மாவட்டங்களில் புகழ்பெற்றதாக காணப்படுகிறது.பல இடங்களில் சத்திர வைத்தியர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் பலர் இவ்வூரில் பயில்வான்களாகவும் அறியப்படுகிறார்கள். இக்கிராமம் பல இளைஞர்களை கொண்டுள்ளதால் பல குழுக்களாக கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தவும், வெளியூர் சென்று பங்கு பெறவும் பரிசினை வெல்லவும் ஆர்வமுடன் செய்கின்றனர்.